நவஜோதி ஜோகரட்னம்

ஒரு மழைக்கால இரவு (1998) அழுவதற்கு நேரமில்லை (2002) வன்னியாச்சி (2005) ஆகிய 3 தாமரைச்செல்வியின் சிறுகதைத் தொகுப்புக்களை காலச்சுவடு ‘வன்னியாச்சி’ என்று 2017 இல் இவற்றைச் சிறுகதைத் தொகுப்பாக்கி வெளியிட்டிருப்பது மகிழ்ச்சி தருகின்ற ஒரு செய்தியாகும்.

இதில் 37 சிறுகதைகள் 335 பக்கங்களில் அடங்கியிருக்கின்றன. (1983 ஆம் 2005 ஆம் ஆண்டு) 22 ஆண்டுகளுக்கு இடைப்பட்டு எழுதிய சிறுகதைகள் அடங்கியிருக்கின்றன. இக்கதைகள் யாவும் 30 ஆண்டுகளுக்குமேற்பட்ட ஒரு நீண்ட போர்க் காலத்துச் சூழலில் மக்களின் அவலங்களை அவர்களின் இழப்புக்களை வேதனைகளை வலியுடனும்; கண்ணீருடனும் பதிவு செய்திருக்கிறார் தாமரைச்செல்வி.

இருண்ட வாழ்வைச் சித்தரிக்கும் நல்லதொரு அட்டைப்படம். தாமரைச்செல்வி 200 சிறுகதைகள் எழுதியிருப்பதாக அறிய முடிகின்றது. ஆனால் இராணுவத் தாக்குதல்கள், இடப்பெயர்வுகள் காரணமாக அவற்றை இழந்துவிட்டமை ஒரு துக்கமான செய்தியாகும்.

ஈழத்துப் புனைகதைஞர்களில் 5ஆம் தலைமுறை எழுத்தாளர்களுள் தாமரைச்செல்வியின் பங்கும் பணியும் மிக முக்கியமானவை என புலோலியூர் ஆ. இரத்தினவேலோன் குறிப்பிட்டுள்ளமை மிகவும் மனங்கொள்ளத்தக்கது.

அந்த வகையில் லண்டனில் வாழ்ந்துகொண்டிருக்கும் பவானி ஆழ்வாப்பிள்ளை 1960 களிலேயே பெண்ணியக் கருத்துக்களை துணிச்சலோடு முன்வைத்த முதல் பெண் எழுத்தாளர் ஆவார். அவரது சிறுகதைகள் கடவுளரும் மனிதரும்’ என்ற சிறுகதைத் தொகுப்பாக வெளிவந்துள்ளது.

அடுத்து எமது ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் 2002 ஆம் ஆண்டு அவரது இலையுதிர் காலத்தில் ஒரு மாலை நேரம் என்ற சிறுகதைத் தொகுப்பை நான் விமர்சனம் செய்திருந்தேன். சந்திரா ரவிந்திரன் நல்லதொரு சிறுகதைப் படைப்பாளி ‘நிலவுக்குத் தெரியும்’ போன்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டவர். சி மாதுமை ‘தூரத்து கோடை இடிகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பையும் , நிவேதா உதயராஜன் நிறம் மாறும் உறவு தொகுப்பையும் வெளியிட்டவர்களாவார்கள்;. சாரங்கா ‘ஏன் பெண்ணென்று’ சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டவர். இப்படி..

எமக்குள்ளும் இத்தகைய பெண் சிறுகதைப் படைப்பாளிகள் நட்சத்திரங்களாக ஒளிர்கிறார்கள் என்பது பெருமை தரும் விடயம்.

லண்டனில் மட்டும் 31 தமிழ் பெண் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். இதனை பதிவுகளில் நான் பதிவு செய்திருக்கிறேன் என்பதனையும் இவ்வேளை கூறுவது பொருத்தமானது என்று நம்புகிறேன்.

தாமரைச்செல்வியின் ‘வீதியெல்லாம் தோரணங்கள்’ என்ற அவரது நாவலை வாசித்ததின் பின்னர் அவரது எழுத்தின் தனித்தன்மைகள் என்னைக் கவர்ந்தன என்றே கூறவேண்டும். அதன் பின்னர் அவரது படைப்புக்களை இலங்கைப் பத்திரிகைகளிலும், ஞானம் சஞ்சிகையிலும் பிரசுரம் காணும் வேளைகளில் தவறாது வாசித்து வருவேன்.

‘வன்னியாச்சி’ என்ற அவரது இந்தச் சிறுகதைத் தொகுப்பிலுள்ள 37 கதைகளையும் வாசித்தேன். இக்கதைகளின் உள்ளடக்கத்தை எப்படிப்பிரித்துப் பார்த்துத் தொகுக்கலாம் என்பதில் முனைந்தேன். ஆனால் தான் வாழ்ந்த கிளிநொச்சி மண்ணின் அந்தப் பிரதேசத்தின் அடையாளத்தை அந்த மக்களின் துயரங்கள் அதாவது சொந்த ஊரை, வீட்டைக் கடையை, உழுது பயிர் செய்த காணியை விட்டு ஒரு முறை அல்ல பல முறை இடம்பெயர்ந்து மக்கள் அலைவதை, வறுமை பசி பட்டினி, இலங்கை இந்திய இராணுவத்தின் கொடுமையான கொலைகள், குண்டு வெடிப்புகள் மக்கள் சிதறிச் சாவது, இப்படியாக இறந்தவர்களை அடையாளம் காண்பது, முதியவர்களின் வலி, குழந்தைகளின் பசி சித்திரவதைகள் என்று தான் வாழ்ந்த பிரதேசத்தின் அதாவது அந்த வன்னி மக்கள் சார்ந்து வலியோடும் கண்ணீரோடும் பின்னிப்பிணைந்துள்ளார் தாமரைச்செல்வி.

ரூனா (95 இல் வீரகேசரியில் வந்த கதை) நோர்வே டாக்டர் பெண் ஒருவர் ஒஸ்லோவிலுள்ள செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் யாழ்ப்பாணம் செல்லும் மருத்துவக் குழுவில் 4 வருஷம் ஒப்பந்தம் செய்திருக்கிறார். இது போன்ற ஒரு சில கதைகள்தான் சற்று விலகி நிற்கிறது.

ஒரு மழைக்கால இரவு (வீரகேசரி 96) என் நெஞ்சைத் தொட்டுக் கசிந்த கதை. சவுதியில் இருந்து வந்த நித்தியானந்தன் மனைவி நந்தினியையும் மகன் சுதனையும் தேடுகின்ற கதை. சனங்கள் நடந்துபோகும்போது அவளும் மகனையும் தூக்கிக்கொண்டு நடந்து போகின்றாள். மழை வந்தால் சனங்கள் ஒதுங்கும்வேளை இருட்டு. நந்தினி நாவற்குழிப்பாலத்தைக் கடந்து நடந்துபோகையில் பாலத்துக்குப் பக்கத்தால இறங்கி தண்ணீரும் சேறுமாக இருந்த வெளியூடாக பிள்ளையுடன் நடந்தாள்.

எறிகணை வீச்சும், தூர விமானத்தின் ஓசையும் தந்த பதட்டத்தில் விளிம்பில்லாத கிணற்றுக்குள் விழுந்ததை யாரும் கவனிக்கவில்லை. சேற்றுக்குள் புதைந்த செய்தியை நித்தியானந்தனுக்குச் சொல்லுவதற்கும் யாருமில்லை. வாழ்நாள் முழுவதும் விடை அறிய முடியாத ஒரு கேள்வியை அவன் கேட்டுக்கொண்டே இருக்கப்போகிறான். என்று தாமரைச்செல்வி கதையை முடிக்கின்றார்.

இந்தக் கதையை வாசித்தபின்னர் என்னால் தொடர்ந்து அவரது கதைகளை வாசிக்க முடியவில்லை. நித்திரையும் வருகுதில்லை. கற்பனைக் கதையில்லைத் தானே உண்மைச் சம்பவங்களைத்தானே தனது படைப்புக்குள் கொண்டுவந்திருக்கிறார் தாமரைச்செல்வி.

நானும் ஒரு தாய் தானே! எப்படி என்னால் நெஞ்சு கனக்காமல் இருக்க முடியும்?. இது தான் தாமரைச்செல்வியின் இந்தப் படைப்பின் வெற்றி என்று கூறுவேன். ஒரு கவிதையோ, சிறுகதையோ, வாசகனை நிறுத்தி சிந்திக்க வைக்கும்போது அந்த படைப்பு வெற்றி பெறுகின்றது என்பது எனது கருத்து.

அடுத்து ‘அடையாளம்’ என்ற கதை என்ன கொடுமை. சனங்கள் குண்டு விழுந்தும் எலும்புக்கூடுகள் வாய்க்கால் கரைகளில் பற்றைகள் மூடிக்கிடந்த கொல்லைப்புறங்களில், மலசல கூடங்களின் குழிகளில் கிணறுகளின் அடியில் அதுவும் நகரத்திற்கு மக்கள் திரும்பிக் கொண்டிருக்கும் இந்த நாட்களில் அதிகமாகவே கண்டுபிடிக்கப்படுகின்றது. அப்பாவி மக்கள் பாவங்கள்.

வேலி பாய்ந்து ஓட முற்பட்ட அந்தக் கணத்தில் சுடப்பட்டு வேலி மேலேயே தொங்கிக்கொண்டிருந்த அதே நிலையிலேயே எலும்புக்கூடாகப் போயிருந்த மனிதன். உயிர் தப்பும் ஆசையில் ஓடிவந்து வேலிபாய்ந்த அந்தத் தருணத்தில் நிகழ்ந்த மரணம். தொங்கிய நிலையிலேயே மழையும் வெய்யிலும் பட்டுத் தசையும் இரத்தமும் காய்ந்து கரைந்து காணாமல் போயிருந்த தேகம். நெஞ்சின் பக்க எலும்பும் கால் பகுதியும் நொறுங்கிக் கிடந்த கோலம். நிச்சயமாக தாமரைச்செல்வி இந்தக் கதையை அழுதழுதுதான் எழுதியிருப்பார்.

இந்தக் கொடுமையான நிகழ்ச்சிகளை வாசிக்கும்போது நான் சிறுமியாக இருந்தவேளை நடந்த சம்பவம் நினைவிற்கு வந்தது. கீரிமலையில் வியாளி என்பவவை கேள்விப்பட்டிருப்பீர்கள் இரு வேறுபட்ட சமூகங்களுக்கிடையில் ஏற்பட்ட சம்பவம் இவருடைய ‘பசி’ என்ற சிறுகதை தமிழ் நாட்டைச் சேர்ந்த இமயவர்மன் என்பவரால் குறும்படமாக எடுக்கப்பட்டு, லண்டனில் நடந்த விம்பம் குறும்பட விழாவில் பார்வையாளர் தெரிவாக விருது பெற்றது எனக் கருணாகரன் தனது அறிமுகவுரையில் குறிப்பிட்டுள்ளார்.

ஓவியர் கே. கிருஷ்ணராஜாவினால் இந்த விம்பம் அமைப்பு முன்னின்று நடாத்தப்படுவது என்பது குறிப்பிடத்தக்கது. தாமரைச்செல்வியின் ‘பசி’ என்ற கதையை இந்நூல் வாசிக்கும்போது அந்தப்படம் எனது மனத்திரையில் ஓடியது. நிச்சயம் நாம் இந்தப் படத்தை பார்த்திருக்கறோம். தாமரைச் செல்வியின் இன்னுமொரு சாதனை தான் இது என்று நெஞ்சு மலர்கின்றது..

அடுத்து இவருடைய ‘அம்மா’ என்ற முதியவர்கள் குறித்துப் பேசுகின்ற கதை கிடுகுகளினால் வேயப்பட்ட அந்த நீளமான மண்டபத்தில் ஆண்களும் பெண்களுமாக 82 முதியவர்கள் அமர்ந்திருந்தார்கள். வாழ்வின் எல்லைவரை வந்து நிற்பவர்கள். சுருங்கிப்போன முகங்களும் வரண்டுபோன மனங்களுமாக 82 பேருக்குப் பின்னாலும் எத்தனையோ சோகக் கதைகள் என்கிறார் தாமரைச் செல்வி.
பிள்ளைகள் வெளிநாட்டில இருந்தும் அவர்களைக் கவனிக்காத ஈறல். இடப் பெயர்வுகள்..

நீங்கள் எந்த ஊர் அம்மா?
அச்சுவேலி
இங்க இடம் பெயர்ந்து வந்தனீங்களோ?
ஓம் அச்சுவேலியிலிருந்து கோப்பாயில வந்து இருந்து, பிறகு தொண்ணூற்றி ஐஞ்சு இடப்பெயர்வோட இங்க வன்னிக்கு வந்தனான்.
ஏனம்மா உங்களுக்கு மனுஷன் இல்லையோ? பிள்ளையளும் இல்லையோ?
இல்லை என்று தலை அசைக்கும்போது தாங்க முடியாத துயரம் வந்து தொண்டைக்குள் அடைக்கும்.

தாமரைச்செல்வி அழகாக கிராமத்துக் கொலோக்கியலில் இந்தக் கதையை நகர்த்துகிறார்.
அன்றைக்கு இரவு நித்திரையே வராது. இங்கிருக்கும் மற்ற பெண்கள் ‘நாலு பிள்ளை பெத்தன் கஷ்டப்பட்டு வளர்த்தன் நடுத்தெருவில விட்டிட்டு போயிட்டாங்களே’ என்று சொல்லி அழும்போது அனுதாபம் ஏற்படும். ஆழ் மனதுக்குள் அழுத்தமாய் ஒருவலி உருவாகும். இதே பெண்கள் ‘பாழ்படுவான் கட்டையில போவான் என்னை நிம்மதியாய் இருக்க விட்டானே. எத்தினை ஆக்கினைப் பட்டன்’ என்று பொருமும்போது தனது துயரம் புதுப்பிக்கப்பட்டது போல உணர்வாள்.

வறுமையிலும் பிள்ளைகளால் பார்க்கமுடியாத கண்டத்திலும் வயது முதிர்ந்த பெற்றோரை பிள்ளைகள் அங்கு கொண்டே விடுகிறார்கள். பிறந்தநாள் அல்லது கொண்டாட்டங்கள் நடந்தால் முதியவர்கள் இருக்கும் இடத்திற்கு சாப்பாடுகள் கொண்டுபோய் கொடுப்பார்களாம். பாவங்கள் அன்றுதான் வடை பாயாசத்தோடு விசேடமாகச் சாப்பிடுவினம்.

அங்க என்ர குஞ்சுகள் என்ன சாப்பிட்டுதுகளோ..? அக்கதையை முடிக்கிறார் தாமரைச்செல்வி. வித்தியாசமான கதை சொல்லல்.

‘தூரத்து மேகங்கள்’ என்ற சிறுகதை சுனாமியில் குடும்பத்தில் அனைவரையும் இழந்து நிற்கும் 11 வயது கஜேந்திரனது கதை

கடவுள் ஏன் இந்தப் பிள்ளைக்கு இந்த வயதில இப்படியொரு துன்பத்தைக் கொடுத்தான்? ஐந்தே ஐந்து நிமிடத்தில் இவனது உலகமே அழிந்து போய்விட்டதே. பதினொரு வயதுப் பிஞ்சு மனம் எப்படித் தேறி எழப்போகிறது

இன்றைக்கு அம்மா, அப்பா, அக்கா, தம்பி என்று அத்தனை உறவுகளையும் பொங்கி வந்த கடலுக்குப் பலி கொடுத்துவிட்டுத் தனித்துப்போய் நிற்கும் பரிதாபம். அவனுக்கு அந்த நாளை நினைத்தாலே நெஞ்சு நடுங்கிப் போகிறது.

இந்த ஸ்கூலில படிச்ச பழைய மாணவி. இப்ப கனடாவில இருக்கிறா. சுனாமியால பாதிக்கப்பட்ட ஆராவது ஒரு மாணவனுக்கு உதவி செய்ய விரும்பியதாய்க் கடிதம் போட்டிருக்கிறா. கஜேந்திரனைப் பற்றி அவவுக்குப் போனில சொன்னனான். உடன கொஞ்சக் காசு அனுப்பியிருக்கிறா. அதில முதல்ல கஜேந்திரனுக்கு யூனிபோமும் தைச்சுப் புத்தகப்பை, சப்பாத்து, தொப்பி எல்லாம் வாங்குவம்’

கடவுளே எத்தனை நாட்களுக்குப் பிறகு இந்தப் பிள்ளையின் முகத்தில்
இந்த சிரிப்பும் சந்தோஷமும்.
கனடா எந்தத் திசையில் இருக்கிறது..?
தெரியவில்லை!

அவனுக்கு அந்தத் திசை நோக்கி கும்பிடவேணும் போலிருந்தது. என்று தாமரைச் செல்வி கதையை முடிக்கின்றார். சிறு சிறு உதவிகளாயினும் வெளிநாடுகளில் இருப்பவர்கள் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு உதவ வேண்டும் என்பதை அற்புதமாகக் கூறுகின்றார் தாமரைச்செல்வி.

‘ஊர்வலம்’; என்ற கதையும் அரசியல் பொதுக்கூட்டங்கள் பற்றி பேசுகின்ற கதை.

‘பவுண் ! ஊர்வலத்துக்கு நீயும் வாறியா’ பவுண் தகப்பனை ஒரு வினாடி யோசனையுடன் பார்த்தான். ஒரு நிமிடம் பேசாமல் நின்றான். பிறகு சொன்னான்.

‘அதுக்கென்ன வாறன், ஆனால் இந்த ஊர்வலங்கள் நடக்கிறதால மட்டும் எங்கட பிரச்சினை தீர்ந்திடுமே..’ நறுக்கென்ற அந்த வார்த்தைகள்

‘தனது பதினேழு வயதில் தனக்கு ஏன் இது தோன்றாமல் போயிற்று என்று கவலையோடு நினைத்துக் கொண்டான் என்று கதையை முடிக்கிறார் தாமரைச்செல்வி.

ஒரு சமூகத்தின் அரசியல் எழுச்சி எத்தகைய வடிவங்களை எடுக்கின்றது என்பதை அந்தந்த காலத்தின் கால தேச வர்த்தமானங்களே நிர்ணயிக்கின்றன.

கம்பர் ஏன் சிறுகதை எழுதவில்லை என்று நாம் கேட்க முடியாது. அதுபோலவே சுதந்திரத்தை அடுத்த காலப்பகுதியில் தமிழ்ச் சமூக நிலைமைகளும் 40 ஆண்டுகளுக்குப் பின்னர் அதாவது 80களில் நிலவிய சூழலும் முழுக்க முழுக்க வித்தியாசமானவை. தந்தை செல்வாவும், வன்னியசிங்கமும், ஜி.ஜி. பொன்னம்பலமும் ஆயுதம் ஏந்திப் போராட நினைத்திருப்பார்கள் என்று நாம் நினைத்துப் பார்க்க முடியாது.

80 களில் நிலவிய சூழல் ஆயுதத்தால்தான் இந்த ஒடுக்குமுறையை எதிர்கொள்ள முடியும் என்று நிறைவு பெறுகிறது.

தாமரைச்செல்வி ‘வன்னியாச்சி’ என்ற இச்சிறுகதைத் தொகுதியில் எழுதியுள்ள இந்தக் கதைகள் ஒரு யுத்த காலத்தின்போது வன்னிமக்கள் அனுபவித்த கொடூரங்களை அந்தக் காலகட்டத்தில் மட்டுமல்ல என்றென்றும் உலகிற்கு எடுத்துச் சொல்கின்ற சிரஞ்சீவிக் கதைகளாக நிலைத்து நிற்கும் என்பதில் மாறுபட்ட கருத்துக்கு இடமில்லை.


0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *